இரண்டாம் உலகப் போர்
இரண்டாம் உலகப் போர் என்ற உடன் நமக்கு நினைவுக்கு வருவது ஹிரோஷிமா, நாகசாகி, ஹிட்லர், ஹாலோகாஸ்ட் எனப்படும் பல லட்சம் யூதர்களின் இன படுகொலை போன்றவை தான். அது தொடர்பான ஹாலிவுட் படங்கள் பார்த்திருந்தால் நார்மாண்டி படையெடுப்பு, டன்கிர்க் வெளியேற்றம், போன்றவற்றையே பார்திருப்போம். முக்கியமாக அமெரிக்காவின் வருகைக்குப் பிறகு எப்படி கூட்டணி நாடுகள் ( Allied forces) வெற்றி பெற்றன என்று தான் கற்பிக்கப் பட்டிருக்கிறோம்.
இது முற்றிலும் உண்மையா? உண்மையான, விரிவான வரலாறு என்ன?
கிழக்கே சோவியத் ஒன்றியம் உலக அளவில் தன் கால் தடங்களை பதிக்கத் தொடங்கியிருந்த காலம் அது. கம்யயூனிசம் என்ற வார்த்தை முதலாளித்துவ நாடுகளிடையே பயத்தை ஏற்பாடுத்தியிருந்த காலம்.
முதல் உலகப் போரின் தோல்விக்கு விமோச்சனம் தேடும் படலமாகேவே ஹிட்லரின் ஆரம்ப கால அரசியல் இருந்திருக்கிறது. ஒட்டு மொத்த ஆட்சியும், ஏனைய அரசு இயந்திரங்களும் தன் வசம் முழுமையாக வந்த பின்னரே யூதர்களுக்கு எதிரான நாச வேலைகளை தொடங்கி இருக்கிறான். மெதுவாக கோயபல்ஸ் தலைமையில் இயங்கிய பிரச்சார அமைச்சகம் யூதர்களே எல்லா பதவிகளையும் எடுத்துக் கொள்கிறார்கள் என்றும், அவர்களை பணம் விழுங்கும் அரக்கர்களாகவும் சித்தரித்து யூதர்கள் மீதான வெறுப்பை ஜெர்மானியர்களிடையே விதைக்க ஆரம்பித்தது.
ஆரிய இனம், அதன் தூய்மையைக் காக்க வேண்டிய அவசியம் என, விரைவில் 'சுத்தமான ஜெர்மானியர்களை' மற்றவர்களிடம் இருந்து அடையாளப்படுத்தும் சட்டங்கள் இயற்றப்பட்டு யுதர்களோடு, ரோமா, ஜிப்சி, மற்றும் உடல்நலம், மனநலம் பாதிக்கப்பட்டோரும் தனியே பிரிக்கப்பட்டனர்.
1938 நவம்பர் மாதத்தின் ஒரு இரவில் வெறிகொண்ட மக்கள் கூட்டத்தால் 100 யூதர்கள் கொல்லப்பட்டனர். நாஜிக்களின் இனவெறிப் பிரச்சாரம் முழுவதுமாக பலன் அளிக்கத் தொடங்கியது.
ஜெர்மனியில் உள்ள ஜெர்மானியர் அல்லாதோர், முக்கியமாக யூதர்களில் ஆரோக்கியமான ஆண்களில் ஆரம்பித்து பின்னர் பெண்கள், குழந்தைகள், உடல்நலமற்றோர் என எல்லோரையும் முகாம்களில் அடைப்பதில் தொடங்கியது ஹோலோகாஸ்ட். இந்த வெறி இறுதியில் லட்சக்கணக்கில் மக்களை கொத்துக் கொத்தாய், கொடூரமாய் படுகொலை செய்வதில் முடிகிறது.
சோவியத் ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்த போல்ஷேவிக்குகளும் உலகை ஆள சூழ்ச்சி செய்யும் யூதர்களாக சித்தரிக்கபட்டனர். 1939 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் இருந்து போல்ஷேவிக்குகளையும் கம்யூனிசத்தையும் ஒட்டு மொத்தமாக அழிக்கப்போவதாக ஓலமிட்டான் ஹிட்லர்.
1939 முதலே கிழக்கிலும் மேற்கிலும் படை எடுக்கத் தொடங்கின ஜெர்மானியின் நாஜி படைகள். வெகு விரைவிலேயே மேற்கில் பெரிய நாடாக இருந்த பிரான்சை பிடித்தன. 1941க்குள் இங்கிலாந்து தவிர ஐரோப்பாவின் அத்தனை நாடுகளும் ஹிட்லரின் பிடிக்குள் வந்தன.
ஜெர்மனியின் நாஜி தரைப் படையான வெஹர்மர்ட்டும் , வான் படையான லுஃப்ட்வாஃபேவும் எதிரிகள் இடையே பீதியை ஏற்படுத்தி சென்ற பக்கமெல்லாம் வெற்றிகளை குவித்தன. இங்கிலாந்து நாட்டையும் அவ்வப்போது வான் வழித் தாக்குதலில் மிரட்டி கொண்டிருந்தது ஜெர்மனி. அது போது பாசிச இத்தாலியின் பங்கு வெகு குறைவே.
அதே சமயம் உலகின் மறுபக்கத்தில் சீனாவிலும் தெற்காசியாவிலும் நிலப் பரப்புகளை ஆக்கிரமித்து கொண்டே பசுபிக் பெருங்கடல் தாண்டி அமெரிக்காவையும் ஓரக் கண்ணால் பார்க்க துவங்கி இருந்தது ஜப்பான்.
பெரும் கடற்போர் (Battle of midway) பசுபிக் பெருங்கடலில் உள்ள மிட்வே (midway) தீவுகளில் நடந்தது. பெரும் கடற்படை கொண்டு தாக்கிய ஜப்பான் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் அமெரிக்கவின் கடல், வான் படைகளால் துரத்தி அடிக்கப்பட்டது. அதுவரையில் இங்கிலாந்திற்கு வெறுமனே ஆயுத உதவி செய்து வந்த அமெரிக்கா தன் கடற்படை மற்றும் ஏனைய தடவாளங்களை இராட்சத அளவுக்கு பெரிதாக்கி உலக போரில் நேரடியாக களம் இறங்கியது.
இவையெல்லாம் மேற்கே நடந்து கொண்டு இருக்க, கிழக்கே நாஜிப் படையினர் கட்டுக்கடங்காத வெள்ளம் போல் போகும் இடமெல்லாம் வெற்றி வாகை சூடினர். சோவியத்தின் கிழக்கு பகுதியில் பல சதுர மைல்கள் அப்போது ஜெர்மன் பிடிக்குள் சிக்கியது.
சோவியத்தின் தென் மேற்கில் உள்ள இயற்கை வளங்கள் நிறைந்த காகஸ் மாகாணத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த நாஜிப்படைகளை சோவியத் ஒன்றியத்தின் தலைமை பொறுப்பாளர் ஸ்டாலின் பெயரில் இருந்த ஸ்டாலின்கிராட் நகரத்தை நோக்கித் திருப்ப ஆணையிட்டான் ஹிட்லர். ஆயிரக் கணக்கில் சோவியத் வீரர்கள் மடிந்து நகரமே தரை மட்டமாகி கொண்டிருந்தது. சோவியத்தில் அப்போது குளிர் காலம் தொடங்கியது. ஸ்டாலின்கிராட் நகரத்தை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற ஸ்டாலினின் கட்டளையை நிறைவேற்ற
செம்படை (red army) மீண்டும் கட்டப்பட்டது. ஆயிரமாயிரம் செம்படை வீரர்கள் மடிந்தாலும் மீண்டும் மீண்டும் வீரர்கள் முளைத்துக் கொண்டே இருந்தனர். புதிதாக செம்படையில் பல பெண்கள் கிளைகள் உருவாக்கப்பட்டன. முதன் முறையாக பெண்கள் நேரடியாக போரில் ஈடுபடுத்தபட்டனர். சோவியத்தின் பெண் சினைப்பர்ப் படைகளும், பெண் விமானப் படைகளும் எதிரிகளிடத்தில் பயத்தை உண்டாகும் அளவிற்கு சிறப்பாக செயல்பட்டன.
பல ஆயிரம் மைல்கள் நீண்ட ஜெர்மனியின் போர்ப்படை பாதைகள் பல திசைகளில் இருந்து வந்த செம்படையினரால் உடைக்கப் பட்டு நாஜி தரைப்படையின் (வெஹர்மட்டின்) ஸ்டாலின்கிராட் கிளைகள் தனிமைப் படுத்தபட்டதால் உணவு, புதிய போர்த் தளவாடங்கள் இல்லாமல் 5 மாதங்கள் கழித்து நாஜி தரைப்படைத் தலைவன் ஜெனரல் போலோஸ் 91000 வீரர்களோடு ஹிட்லரின் ஆணையை மீறி சோவியத்திடம் சரணடைந்ததின் மூலம் இரண்டாம் உலகப் போரில் முதன் முறையாக நாஜிப் படைகள் தோல்வியை சந்தித்தன. அது முதலே ஹிட்லரின் பிடி தளரத் தொடங்கியது. இவ்விரு படைகளிலுமே 10 லட்சத்திற்கும் மேலான வீரர்கள் மடிந்திருந்தனர்,
சோவியத் ஒன்றியம் பல பின்னடைவுகளை சந்தித்தாலும், பல நூறு சதுர மைல்களை இழந்து இருந்தாலும் தமது நாட்டு மக்களிடையேயும், போர் வீரர்களிடையேயும் மன உறுதி குலையாமல் செயலாற்ற நேரடியாக ஸ்டாலின் களத்தில் இறங்கி போர் படைகளை திரட்டுவது, தளவாடங்களை அமைப்பது, விரைவில் அவை இரண்டையும் இணைக்க வழி வகுப்பது என பல வேலைகளில் உறுதுணையாக நின்றார். நாடெங்கிலும் பல பரப்புரைகள் நடந்தேறின, வெற்றிகள் கொண்டாடப் பட்டன, தோல்விகள் மறைக்கப்பட்டன.
ஸ்டாலின்கிராட் போர் 1943 பிப்ரவரிஇல் முடிவுக்கு வந்த பின் சோவியத் படைகள் ஜெர்மனி நோக்கி நடக்கத் தொடங்கின. ஆனால் 1944 வரை ஜெர்மனி ஆக்கிரமித்த சோவியத் பகுதிகளை மீட்கவே போரிட வேண்டியிருந்தது. 1930 இல் இருந்து 1940 வரை சோவியத்தில் நடந்தேறிய தொழில்மயமாக்கல் தான் இந்த போர்த் தளவாடங்கள் உற்பத்திக்கும் வெற்றிக்கும் பெரிதும் உதவின என்பது வரலாற்று அறிஞர்களின் கணிப்பு.
1940 இல் ஐரோப்பாவில் பிரான்சின் வீழ்ச்சிக்குப் பிறகு ஜெர்மனியை எதிர்த்து 1944 இன் தொடக்கம் வரை போரிட்டது சோவியத் மட்டுமே.
அதுவரையில் சில வான்தாக்குதல்கள், பசுபிக் கடலில் ஜப்பானுடன் போர், வடக்கு ஆப்பிரிக்காவில் போர் என குறுகிய அளவிலேயே அமெரிக்கா, இங்கிலாந்து போன்றவை பங்கு கொண்டன. இங்கிலாந்து தன் நாட்டை தக்க வைத்துக் கொள்ளவே பெரும்பாடுபட்டு கொண்டிருந்தது.
ஜூன் 1944 வருடம் தான் இங்கிலாந்து, அமெரிக்கப் படைகள் மீண்டும் ஐரோப்பாவில் கால் வைத்தன. நார்மாண்டி படையெடுப்பு எனப்படும் அந்த சம்பவதிற்கு இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இருந்து 160000 படை வீரர்கள் குவிக்கப் பட்டனர். மேலும் 20 லட்சம் வீரர்கள் கடல் வழியும் வந்திறங்கினார். மேற்கில் சோவியத்தின் செம்படையின் முன்னேற்றத்தால் பிரிந்து பெரிதும் பலவீனமடைந்து இருந்த நாஜிப் படைகளைத்தான் அவர்கள் எதிர்க்கொள்ள வேண்டியிருந்தது.
விரைவில் இரண்டு பக்கமும் நாஜி ஜெர்மனியை நெருக்கிய இந்தக் தாக்குதல், 1945 மே மாதம் பெர்லினின் விழ்ச்சியில், ஹிட்லரின் தற்கொலையில் முடிவுற்றது. ஜெர்மன் தலைநகர் பெர்லினில் சோவியத் கொடி ஏற்றப்பட்டது.
அமெரிக்காவும், இங்கிலாந்தும் சேர்ந்து சந்தித்த நாஜி படை டிவிசன்கள் 10, சோவியத் ஒன்றியம் தனியாக எதிர்கொண்ட டிவிசன்கள் 200. இரண்டாம் உலகப் போரின் இறுதியில் சோவியத்தில் மட்டுமே ஏற்பட்ட உயிரிழப்பு 2.5 கோடியை தொட்டது, இதில் போர்க் களத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1கோடி.
இரண்டாம் உலகப் போரில் நேரடியாக ஈடுபட்டு உயிழந்தவர்களில் மூன்றில் இரண்டு பேர் சோவியத்தை சேர்ந்தவர்கள். ஒட்டு மொத்தமாக இந்த உலக போரின் உயிர் இழப்புகள் 4.5 கோடி. அதில் களத்தில் உயிர் இழந்தவர்கள் 1.5 கோடி. ஆம், இப்போரில் சோவியத்தின் ஒரு சந்ததியே இல்லாமல் அழிந்து போனது என எழுதினால் அது மிகையாகாது, அத்தனை இளம் வீரர்கள் மடிந்து போயிருந்தனர்.
இது மட்டுமல்லாமல் ஆசியாவில் சோவியத்தின் போர் ஆதிக்கத்தால் ஜப்பானும் சரணடைந்து விடுவதென முடிவெடுத்த பிறகே ஹிரோஷிமா, நாகசகியில் அணுகுண்டுகள் போடப்பட்டன.
1944 ஆம் ஆண்டு தான் அமெரிக்கர்கள் புசென்வல்ட் நகரத்தில் இருந்த யூத முகாம்களை கண்டு அறிந்த பின்பே ஹிட்லரால் நெருப்பை கொண்டு யூதர்களை கொன்ற ஹோலோகாஸ்ட் உலகிற்கு தெரிய வருகிறது. ஆனால் இதற்கு முந்தைய வருடமே சோவியத் படைகள் இந்த நாசச் செயலை கண்டு சொன்னதை அமெரிக்கர்கள் ஏற்கவில்லை, அவர்களே நேரில் காணும் வரை நம்பவும் முடியவில்லை. இப்படி பல முக்கிய நிகழ்வுகள் சோவியத்தின் நேரடி பங்களிப்பால் தான் நடந்தேறின.
நாஜி ஜெர்மனியின் விழ்ச்சி நார்மாண்டி படையெடுப்பில் வேகமெடுத்தது என்றாலும், அதன் தொடக்கம் ஸ்டாலின்கிராடில் இருந்து தான் ஆரம்பித்தது. உண்மையிலேயே இரண்டாம் உலகப்போர் ஜெர்மனிக்கும் சோவியத் ஒன்றியத்திற்குமான போர், ஏனைய நாடுகள் எல்லாம் துணை நின்றன என்பது தான் பல வரலாற்று அறிஞர்கள் ஏற்று கொண்ட கருத்து.
ஐரோப்பாவில் நாஜி கட்சி உறுப்பினர்கள், எஸ்.எஸ் மற்றும் பிறரைக் குற்றஞ்சாட்ட வேண்டிய நியூரம்பெர்க் வழக்கு விசாரணைகளின் வலு குன்றியது. மனித குலத்திற்கு எதிராக நடந்தேறிய மிக மோசமான குற்றங்களில் பங்கு பெற்ற பெரும்பாலோர் விடுவிக்கப் பட்டனர் அல்லது குறைவாகவே தண்டிக்கப் பட்டனர். இதற்கு முக்கிய காரணம் அமெரிக்காவில் நடந்த யூத, மற்றும் கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம். நாஜி கட்சியை சேர்ந்த பலரும், SS சேர்ந்த பலரும் அமெரிக்காவிலும், நடோ என்ற அமெரிக்க தலைமை கொண்ட இராணுவக் கூட்டணியிலும் பெரும் பதவிகளைப் பெற்றனர்.
முதலாளிகள் கட்டுக்குள் இருந்த முதாலித்துவ நாடுகள் கம்யூனிசம் என்ற வார்த்தையைக் கண்டு பயந்தனர். தங்கள் சொத்துகள், பதவிகள், ஆதிக்கம் அனைத்தும் பறி போய்விடுமோ என்று பயந்தனர். அப்பயமே பின்னர் பனிப் போர் வடிவை எடுத்தது.
உலகப் போரின் போதும் அதற்கு இடைப்பட்ட காலகட்டத்திலும் ஸ்டாலின் மற்றும் சோவியத் ஒன்றியதின் பங்களிப்பை உலகத்தாரும் சர்ச்சில் மற்றும் ரூஸ்வெல்ட் போன்ற தலைவர்களும் பெருமையுடனும் , நன்றியுடனும் பார்த்தனர். ஆனால் இவையெல்லாம் போரின் முடிவிலேயே மாறத் தொடங்கியது. சோவியத்தின் பங்களிப்பு குறைத்து மதிப்பிடப்பட்டு உலக வரலாறும் திருத்தி எழுதப்பட்டது, உலக அளவில் பண்பாட்டுத் தளத்தில் நிகரற்று திகழும் அமெரிக்காவில் இருந்து புத்தகங்கள், திரைப்படங்கள் என பல வடிவங்களில் உண்மை திரித்துக் கூறப்பட்டது, கூறப்படுகிறது.
இரண்டாம் உலக போரில் சோவியத்தின் பங்கு அசாத்தியமானது, வரலாற்றுச் சிறப்பு மிக்கது, மறைக்கப்படும் இந்த வரலாறு மீட்டெடுக்கப் படவேண்டும்.
Comments
Post a Comment