சீனாவின் தீவிர வறுமை ஒழிப்புச் சாதனை.
கடந்த 2021 பிப்ரவரி மாதம் 25 ஆம் நாள் சீன அதிபர் ஜீ ஜின்பிங் சீனாவில் தீவிர வறுமை முழுமையாக ஒழிக்கப் பட்டுவிட்டதாக அறிவித்தார்.
ஐ.நாவின் நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDG) திட்டத்தில் உலகில் தீவிர வறுமையை ஒழிக்க, 2030 ஆம் ஆண்டை இலக்காக வைத்துள்ளது. வேறு எந்த நாடும் அதை அடையும் நிலையில் இல்லாத காலத்தில், கொரோனா தொற்றின் இடையிலும் இது எப்படி சாத்தியமானது? 1981 முதல் நடந்தேறிய இந்த பணிகளில் உலகில் நடந்த வறுமை ஒழிப்பில் 75 சதவிகிதம் சீனாவில் மட்டுமே நடந்துள்ளது, இந்த அசாத்திய சாதனை எப்படி அரங்கேறியது?
அக்டோபர் 1, 1949 ஆம் ஆண்டு மாவோ சீனாவின் விடுதலையை உலகிற்கு அறிவித்தார். அன்று சீனா உலகின் பதினோராவது ஏழ்மையான நாடாக இருந்தது. உற்பத்தி சக்திகளின் பொதுவுடைமை, மற்றும் நில சீர்திருத்தம் மூலம் அடுத்த இருபது வருடங்களில் சராசரி ஆயுட்காலம், படிப்பறிவு, சுகாதாரம், உணவு உற்பத்தி போன்றவற்றில் அசாத்திய முன்னேற்றங்களை கண்டது சீனா. ஆனாலும் பெருமளவு மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே இருந்தனர்.
மாவோவின் மறைவுக்கு பின் அதிபரான டெங்க் ஜியாபிங், சோஷியலிசம் வறுமையை பங்கு போட்டுக் கொள்வது அல்ல என்று கூறினார். உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியில் சீனா பின் தங்கியுள்ளதை உணர்ந்தது டெங்கின் அரசு. மெதுவாக சீனாவின் கதவுகள் வெளிநாட்டு முதலீட்டிற்கு திறக்கப்பட்டன. கிழக்கு மாகாணங்கள் மட்டுமே பெருவாரியாக முதலீடுகளுக்கு திறக்கப்பட்டன. வெளிநாட்டு முதலீடு நடந்தாலும், சுரங்கங்கள், வங்கிகள், போக்குவரத்து போன்ற முக்கிய நிறுவனங்கள் அரசிடம் இருந்தன. இன்றும் 40 சதவிகித நிறுவனங்கள் அரசிடம் உள்ளன. அரசின் கட்டுக்குள் இருந்த இந்த முதலீடுகள் அசாத்திய வளர்ச்சியை தந்தன. 1978 முதல் ஒவ்வொரு வருடமும் 9.5 சதவிகித வளர்ச்சி விகிதத்தை கண்டது சீனா. முதலீடுகள் செய்ய வெளி நாட்டு நிறுவனங்கள் அறிவு பரிமாற்றத்தை செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகள் போடப்பட்டன. இதனுடன் வெளிநாடுகளில் உயர்கல்வி, உள்நாட்டு உயர்கல்வியில் அதிக முதலீடு, போன்றவை இன்று சீனா அறிவியல், தொழில்நுட்ப துறைகளில் தன்னிச்சையாக செயல்படுவதற்கும், உலகில் சிறந்து விளங்குவதற்கும் அடித்தளமாக அமைந்தது.
மாவோவின் ஆட்சிகாலத்தில் நடந்த முன்னேற்றங்கள் இல்லாமல் இந்த முன்னெடுப்புகள் சாத்தியமில்லை என்பதையும் டெங்க் பல முறை பேசியுள்ளார்.
1982 இல் முதன் முதலில் மூன்று மாகாணங்களில் சில கிராமங்களில் வறுமை ஒழிப்பு ஒரு அரசு திட்டமாக தொடங்கியது. 1986 இல் நாடு தழுவிய வறுமை ஒழிப்பு திட்டம் தொடங்கியது. 1988 இல் டெங்க் ஜியாபிங் அறிவித்த வளர்ச்சி திட்டத்தில், கிழக்கு மாகாணங்களில் ஏற்படும் வளர்ச்சி மற்ற மாகாணங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று கூறப்பட்டு இருந்தது.
ஜியாங் ஜமின் தலைமையில் தொடர்ந்த பொருளாதார வளர்ச்சியும், வறுமை ஒழிப்பும், 1981 இல் 88 சதவிகிதமாக இருந்த வறுமையை, 2000 அம் ஆண்டில் 50 சதவிகிதமாக குறைத்தது. ஹு ஜின்டாவ் அதிபரான பின்னர் மிதமான வளம் பெற்ற சமூகத்தை கட்ட வேண்டும் என்று உறுதி கொண்டது சீனா. ஹு ஜின்டாவ் ஆட்சி காலத்தில் 10 சதவிகிதமாக குறைந்தது தீவிர வறுமை.
2012 ஆம் ஆண்டு தற்போதைய அதிபர் ஜீ ஜின்பிங் பதவி ஏற்கும் போது சுமார் 122 மில்லியன் மக்கள் அதாவது 12 கோடி மக்கள் தீவிர வறுமையில் இருந்தனர்.
ஜீ ஜின்பிங் அரசு Targetted Poverty Alleviation என்ற இலக்குகள் கொண்ட வறுமை ஒழிப்பு திட்டத்தை தொடங்கியது.
TPA திட்டம்.
இந்த வறுமை ஒழிப்பு திட்டம், வருமானத்தை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாமல், உலகில் முதல் முறையாக ஐ.நா வின் Multi dimensional poverty என்ற பன்முக வறுமையை கணக்கில் கொண்டு வகுக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் இலக்குகள்
1. One Income - ஒரு வருவாய், அனைவருக்கு குறைந்தது 2.30 டாலர் வருவாய். இது உலக வங்கியின் அளவான 1.90 டாலரை விட சற்று அதிகம்.
2. Two Assurances-இரண்டு உத்திரவாதங்கள், அனைவருக்கு உணவு மற்றும் உடை.
3. Three Guarantees-மூன்று வாக்குறுதிகள், அனைவருக்கும் மருத்துவ வசதி, மின்சாரம், தண்ணீர் வசதி கொண்ட வீடுகள் மற்றும் 9 வருட இலவச கல்வி.
வறுமை ஒழிப்பு யாருக்கு?
இந்த வறுமை ஒழிப்பை அமலாக்க முதலில் இந்த திட்டத்தின் பயனாளிகளை கண்டறிய வேண்டியிருந்தது. அதன் பொருட்டு 2014 ஆம் ஆண்டில் சுமார் 800,000 கம்யுனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் நாட்டின் கடை கோடிக்கும் சென்று தகவல் சேகரித்தனர். இந்த தகவல்களை 2,000,000 பேர் சரி பார்த்தனர். பிக் டேட்டா போன்ற நவீன தொழில் நுட்பம் பெருமளவில் உபயோகிக்கப் பட்டது.
இறுதியில் 128000 கிராமங்களில், 3 கோடி குடும்பங்களில், 9 கொடி மக்கள், இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
வறுமை ஒழிப்பு யாரால்?
திட்டத்தை அமல் படுத்த மீண்டும் கட்சி உறுப்பினர்கள் மேலே கண்டறியப்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் சென்றனர், சுமார் 30 லட்சம் கம்யுனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இந்த பணியில் ஈடு பட்டனர். இதில் 255,000 கட்சி உறுப்பினர்கள் அந்த கிராமங்களிலேயே பல வருடங்கள் தங்கி பணி புரிந்தனர். இந்த 7 வருடங்களில் சுமார் இரண்டாயிரம் கட்சி உறுப்பினர்கள் பல காரணங்களால் பணியிலேயே உயர் இழந்ததும் நடந்தது.
2015 ஆம் ஆண்டிற்குள் எல்லா கிராமங்களிலும் கட்சி தொண்டர்கள் இருந்தனர்.
"கட்சியின், ஒட்டுமொத்த சமுதாயத்தின், நாட்டின் ஒட்டுமொத்த ஆற்றலையும் இந்த பணிகளுக்கு நாம் திரட்ட வேண்டும்" என்று ஜீ ஜின்பிங் ஒரு முறை கூறினார். அதே போல் தான் நடந்தது இந்தப் வறுமை ஒழிப்பு போரும்.
டெங்கின் 1988 திட்டத்தின் படி, கிழக்கு மாகாணங்கள் மற்ற பகுதிகளுக்கு உதவி செய்தன. 9 கிழக்கு மாகாணங்கள் 100 பில்லியன் யுவான், ( சுமார் 1.1 லட்சம் கோடி ரூபாய்) முதலீடு செய்தன. கிழக்கில் இருந்த 22000 நிறுவனங்கள் சுமார் 1.1 ட்ரில்லியன் யுவான் ( 12 லட்சம் கோடி), நடுவன் அரசு துறைகள் 100 பில்லியன் யுவான் (1.1 லட்சம் கோடி), அரசு நிறுவனங்கள் 13 பில்லியன் யுவான் (13 ஆயிரம் கோடி) என ஒட்டுமொத்த நாடும் வறுமை ஒழிப்பில் பங்கு எடுத்தது.
இந்த 9 மாகாணங்கள் 131000 அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை இந்த பணிகளுக்கு அனுப்பின. அரசு நிறுவனங்கள் 10000 திட்டங்களில் பணிபுரிந்தன. 127000 தனியார் நிறுவனங்கள் 139100 கிராமங்களில் உதவி செய்தன. இராணுவம் 924000 மக்களுக்கு 4100 கிராமங்களில் பணி புரிந்தது. கல்வித் துறை 44 கல்லூரி, பல்கலை கழகங்களை இந்த பணிகளுக்காக இணைத்தது. பண உதவி மட்டுமல்லாது பிற வழிகளிலும் நாடே இந்த வறுமை ஒழிப்பை செயல் படுத்த உழைத்தது.
வருமை ஒழிப்பு எப்படி?
இந்த வறுமை ஒழிப்பு 5 அம்ச திட்டமாக செயல்படுத்தப் பட்டது.
1. தொழில்துறை முன்னேற்றம்
2. இடமாற்றம்.
3. கல்வி.
4. சமூக உதவி திட்டங்கள்.
5. சூழலியல் பாதிப்பை ஈடுகட்டுதல்.
தொழில்துறை முன்னேற்றம்
தொழில்துறை நிறுவனங்களை இந்த மாகாணங்களில் அமைப்பது, உள்ளூர் உற்பத்தியை பெருக்குவது ஆகிய இலக்குகளுக்கு கடனுதவி, தொழில்நுட்பம், சந்தை, உபகரணங்கள் போன்றவை எளிதில் கிடைக்க ஏது செய்யப்பட்டன. 98 சதவிகித குடும்பங்கள் பயன் பெரும் விதத்தில் 30000 தொழில்துறை தளங்கள் உருவாக்கப் பட்டன. இதன் மூலம் 2.2 கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்ற உள்ளூர் உற்பத்திகள் விரிவடைந்தது.
இடமாற்றம்.
96 லட்சம் மக்கள் அதாவது வறுமை ஒழிப்பில் பயனடைந்த 10 சதவிகித மக்கள் இடப்பெயர்வு செய்யப்பட்டவர்கள். மிகவும் தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்தவர்கள், இயற்க்கை சீற்றங்களுக்கு அதிகம் உள்ளாகும் கிராம வாசிகள், வறட்சியான பகுதியில் இருந்தவர்கள் என பலதரப்பட்ட மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இடமாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு வீடுகளோடு, 6100 பள்ளிகள், 12000 சுகாதார மற்றும் மருத்துவ நிலையங்கள், 3400 முதியோர் இல்லங்கள், 40000 கலாச்சார கூடங்கள் என சகல வசதிகளும் செய்யப்பட்டன. குடியமர்த்தப்பட்ட மக்களில் வேலை செய்ய தகுதியானவர்களில் 75 சதவிகிதத்தினறுக்கு புது நிறுவனங்கள், மற்றும் பயிற்சிகள் மூலம் வேலை கிடைத்தது.
கல்வி
தலைமுறை கடந்து செல்லும் வறுமையை ஒழிக்க கல்வி உதவுகிறது என்பதை உணர்ந்து கல்வியில் பெரும் பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டில் 99.8 பள்ளிகளில் அனைத்து வசதிகளும் இருந்தது. இதில் 95.3 பள்ளிகளில் இணைய வசதியும், மல்டிமீடியா வகுப்பறைகள் இருந்தன. இந்த 7 வருடங்களில் பள்ளிக் கல்வியை இடையில் விட்டவர்கள் 200,000 பேர் மீண்டும் பள்ளிகளுக்கு சேர்க்கப்பட்டனர். சீனாவில் மொத்தம் 64 கோடி மாணவர்களுக்கு கல்வி உதவி தரப்படுகிறது. 4 கோடி மாணவர்களுக்கு உணவு வழங்கப் படுகிறது. 1.7 கோடி ஆசிரியர்கள் கிராமப் பகுதிகளுக்கு நியமிக்கப் பட்டனர். மிகவும் பின்தங்கிய கிராமங்களுக்கு 190000 ஆசிரியர்கள் பணியமர்த்தப் பட்டனர். எல்லா சோஷியலிச நாடுகளைப் போலவும், நகரங்களில் இருக்கும் இளைஞர் பலர் கிராமங்களில் பணி புரிகின்றனர். கல்லூரி படிப்பு சேர்க்கையில் சில வருடங்களாக பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகமாக இருக்கிறது.
சீனாவில் கல்வியின் வளர்ச்சியை புரிந்து கொள்ள திபெத்திய மாகாணத்தின் புள்ளி விவரங்கள் சில. 1951 முதல் 2021 வரை திபெத்தில் 100 பில்லியன் யுவான் கல்விக்காக மட்டும் செலவிடப் பட்டுள்ளது. 1951 ஆம் ஆண்டு வெறும் 2 சதவிகிதம் இருந்த பள்ளி சேர்க்கை, 2021 ஆம் ஆண்டு 99.8 சதவிகிதமாகவும், கல்லூரி படிப்பில் 40 சதவிகிதமும் இருக்கிறது.
சமூக உதவி திட்டங்கள்.
நலிவடைந்த குடும்பங்கள், ஊனமுற்றோர் உள்ள குடும்பங்களுக்கு நேரடி பண உதவியும் செய்யப் படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் சுமார் ஒரு கோடி மக்களுக்கு நிதி அனுப்பப்படுகிறது. ஆறு கோடி மக்களுக்கு பென்சன் திட்டமும் பயனளிக்கிறது.
இந்த 7 வருடங்களில் 118000 சுகாதார, மருத்துவ ஊழியர்கள் 58000 திட்டங்களை உருவாக்கி செயல் படுத்தினர். கிராமங்களில் பணி புரிய முன்வந்த 60000 மருத்துவ மாணவர்களுக்கு இலவச மருத்துவ கல்வி வழங்கப்படுகிறது.
சூழலியல் பாதிப்பை ஈடுகட்டுதல்.
2013 ஆம் ஆண்டு முதல் 5 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் காடுகளாகவோ, புல்வெளிகளாகவோ மாற்றப் பட்டுள்ளன. கடந்த முப்பது ஆண்டுகளில் உலகில் நடந்த காடுகளின் மீளுருவாக்த்தில் 25 சதவிகிதம் சீனாவில் நடந்துள்ளது. எந்த நாட்டிலும் நடக்காத அளவு இங்கே காடுகள் உருவாக்கப் பட்டுள்ளன. இந்த காடுகளில் 10 லட்சம் பேர் ரேஞ்சர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர்.
இலக்குகளின் மதிப்பீடு
வறுமை ஒழிப்புத் துறை மூலம் வறுமை ஒழிப்பு மதிப்பீடு செய்யப் பட்டது. இந்த மதிப்பீடு மாகாணங்களுக்கு இடையே மாற்று மதிப்பீடு, மூன்றாம் தரப்பு மதிப்பீடு, கண்காணிப்பு, முடிவுகளின் மதிப்பீடு என பல அடுக்குகளாக நடந்தது. இந்த மதிப்பீடுகளில் அனைத்து பயனாளிகளும் தேர்ச்சி அடைந்த பின்னரே சீனாவில் தீவிர வறுமை ஒழிக்கப் பட்டதாக அறிவிக்கப்பட்டது. தவறான தகவல்களை தந்தது, நிதியை கையாடல் செய்தது என பல குற்றங்களும் தண்டிக்கபட்டன.
வறுமை ஒழிப்புத் திட்டத்தின் தாக்கமும், எதிர்காலமும்.
வரலாறு காணாத வறுமை ஒழிப்பை நிகழ்த்திய சீனா இதோடு நின்றுவிடவில்லை. அடுத்த கட்டமாக கட்சியின் 19 ஆவது பிளினத்தில் ஒப்பீட்டு வறுமையை (Relative Poverty) சரி செய்வது என முடிவு எடுக்கப்பட்டது. குழந்தை மற்றும் முதியோர் பராமரிப்பு, கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ சேவைகள் மற்றும் வீட்டுவசதி ஆகியவற்றை மேம்படுத்துவது என ஒப்பீட்டு வறுமை ஒழிப்புக்கான முன்னெடுப்புகள் தொடர்கின்றன. விவசாயத்தை நவீனமயமாக்கல், உணவு பாதுகாப்பு, நிலத்தை மேம்படுத்துதல், நகர, கிராம வாழ்நிலைகள் இடையில் உள்ள சமதுவமின்மையை குறைத்தல் என அடுத்த இலக்குகளை நோக்கி நடை போடத் தொடங்கியுள்ளது சீனா.
எல்லோருக்குமான செழிப்பு ( Common prosperity) என்ற வார்த்தையை பரவலாக பயன்படுத்த தொடங்கியிருக்கும் அரசு சமீப காலங்களில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. தனியார் கல்வி பயிற்சி மையங்கள் மீதான தடை, ஏகபோக நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகள், வேலை நாள் குறைப்பு, என பல அதிரடி அறிவிப்புகள் இதில் அடங்கும்.
ஐக்கிய நாடுகளின் பொது செயலாளரான அந்தோனியோ குட்டரெஸ், இந்த வறுமை ஒழிப்பு திட்டத்தை வருமைக்கெதிரான வரலாற்றின் மிகப் பெரிய சாதனை என்று கூறினார். அத்தனை சிறப்பு மிக்க இந்த தீவிர வருமை ஒழிப்பு ஏனைய நாடுகளுக்கு பல பாடங்களோடு ஒரு உத்வேகத்தையும் தரும் என்பதில் சந்தேகமில்லை.
கம்யுனிஸ்ட் கட்சியின் ஆட்சியில், கட்சி தொண்டர்களின் பெரும்பங்கில் நடந்த இந்த மகத்தான சாதனை மக்கள் நலனில் அக்கறை உள்ள சோஷியலிச நாடுகளால், சோஷியலிச கட்சிகளால், தான் வருமையை ஒழிக்க முடியும் என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது. உலகம் முழுவதும் இருக்கும் பொதுவுடமைவாதிகளுக்கு ஒரு சோஷியலிச எதிர்காலத்தில் நம்பிக்கையையும் உறுதி செய்கிறது.
மூல ஆவணங்கள்
https://thetricontinental.org/studies-1-socialist-construction/
http://www.xinhuanet.com/english/2021-04/06/c_139860414.htm
Comments
Post a Comment