விடுதலை நோக்கி
மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்டு கட்சியின் தலைவர், களப் போராளி, ஜனநாயக மாதர் சங்கத்தின் நிறுவன தலைவர்களில் ஒருவருமான மறைந்த தோழர் மைதிலி சிவராமன் அவர்கள் Social Scientist என்ற பத்திரிக்கைக்கு 1975 ஆம் ஆண்டு எழுதிய Towards Emancipation என்ற கட்டுரையில் இருந்து சில குறிப்புகள்.
மார்க்சிய தத்துவ ஆசான் பிரடெரிக் எங்கெல்ஸ் தன்னுடைய " குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்" என்ற புத்தகத்தில் உற்பத்தி சக்திகள் மற்றும் அதன் காரணமாக மாறிப் போன குடும்பம் என்கிற கட்டமைப்பையும் வரலாற்று ரீதியாக பார்க்கிறார்.
அதில் ஒரு வளர்ச்சி கட்டத்தில் (Barbarism) பெண்களின் கட்டுபாட்டில் தம் வீட்டைச் சுற்றி மட்டும் செய்யப்பட்ட விவசாயம் பெருநிலங்களில் செய்யப்பட்டது, கூடவே கால்நடை வளர்ப்பும் தொடங்கியது. இது நடந்த போது தான் உற்பத்தியில் முக்கிய இடம் ஆண்களிடம் சென்றது.
உணவு கொள்முதல் ஆண்களிடம் இருந்தால், அதன் விளைவாக அதில் கிடைக்கும் உபரியை பெண்கள் உண்டாலும், அதற்கு உரிமை கூற முடியவில்லை. இதுவே குடும்பத்தில் பெண்கள் வகித்த முக்கிய பாத்திரம் மாற அடிப்படையாகக் அமைந்தது. இருந்தும் சொத்து ஆண்களின் வாரிசுகளுக்கு செல்லவில்லை, ஏனெனில் குடும்பம் இன்னும் தாய்வழியாகவே இருந்தது, வம்சாவளி தாய் வழியில் இருந்தது, சொத்து தாயின் இனத்திற்கு சென்றது.
ஆகையால் தாய்வழி உரிமையை உடைக்க வேண்டி இருந்தது. எங்கெல்ஸ் இதை "மனித வரலாற்றில் மிகவும் தீர்க்கமான" முடிவு என்கிறார். பெண் உறுப்பினர்களுக்கு பதிலாக ஆண் உறுப்பினர்களின் வழித்தோன்றல்கள் குலங்களில் இருக்க வேண்டும், பெண்களின் சந்ததிகள் விலக்கப்பட்டு அவர்களின் தந்தைக்கு மாற்றப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இது ஏற்கனவே இருந்ததில் இருந்து நேர் எதிராக மாறியது.
பெண் வழி உரிமை வீழ்ந்ததுதான் பெண் இனத்திற்கு ஏற்பட்ட உலக வரலாற்று தோல்வி என்கிறார் எங்கெல்ஸ். பிறகு ஆண் வீட்டிலேயும் கட்டுப்பாட்டை எடுத்தான்,
பெண் தாழ்த்தப்பட்டாள், ஆணின் காமத்தின் அடிமை, குழந்தைகளை வளர்ப்பதற்கான ஒரு கருவி என ஆகிப்போனாள். தந்தை வழி உரிமையை செயலாக்க ஒருதார மணம் வந்தது. விபச்சாரமும் ஒருதார மணத்தின் தவிர்க்க முடியாத விளைவாக எழுந்தது. இப்படியாக ஆணாதிக்கக் குடும்பமும் உருவானது.
திருமணத்தின் முந்தைய வடிவங்களுடன் ஒப்பிடும்போது ஒருதார மணம் ஒரு முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இருப்பினும், இது ஒரு அடக்குமுறை நிறுவனமாக இருக்கிறது, அதில் பெண், வெளியில் எந்தப் பங்கையும் வகிக்காமல் விலக்கி வீட்டிற்குள் அடைத்து வைக்கப்படுகிறாள். இன்றும் பெண்ணைக் கட்டுப்படுத்தும் கடுமையான ஒழுக்க நெறியான கற்பு, குடும்பத்திற்குள் சொத்துக்களை வைக்கவே எழுந்தது.
பெண் என்பவள் சமூகத்தின் தோற்றம் முதலே ஆணின் அடிமையாக இருந்தாள் என்பது பதினெட்டாம் நூற்றாண்டின் enlightenment காலத்திலிருந்து நம்மிடம் வந்து ஒரு அபத்தமான கருத்து. பல சகாப்தங்களுக்கு சுதந்திரமாக மட்டுமல்லாமல், மிகவும் மரியாதைக்குரிய இடத்தில் பெண்கள் இருந்தனர்.
தனி சொத்தின் வளர்ச்சியோடு குடும்பமும் சமூகத்தின் அடிப்படை அலகு ஆனது என்று நிறுவினார் எங்கெல்ஸ். ஆனால் அதில் பெண்ணின் பங்கு நாளடைவில் சமூக தன்மையில் (communal) இருந்து தனிச் சேவை (Private service) ஆகிப் போனது. தொழிற்புரட்சி குடும்பத்தில் பெண்ணுக்கு மிஞ்சமிருந்த மரியாதையையும் இல்லாமல் ஆக்கி விட்டது
பின்னுக்கு தள்ளப்பட்ட பெண் இனத்தின் பின்தங்கிய நிலையை, மதம், இலக்கியம், நெறிமுறைகள், சமூக விதிமுறைகள், என எல்லாம் சேர்ந்து உறுதி செய்தன.
பெண் எப்படி விடுதலை பெற முடியும் இன்னும் சரியாகச் சொல்வதானால், அவள் எப்படி தன்னை விடுவித்துக்கொள்ள முடியும்? இந்த விவாதத்தின் தொடக்கப் புள்ளி அவள் எப்படி முதலில் அடிமையானாள் என்பதிலே தான் இருக்க வேண்டும். இன்னும் பல காரணங்கள் இருக்க சமூக உற்பத்தியில் இருந்து விலக்கப்படுவதே, பல நூற்றாண்டுகளாக பெண்ணின் இந்த நிலைக்கு காரணமாக இருக்கிறது.
வீட்டு வேலை பெண்ணின் படைப்பாற்றலுக்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் இல்லாமல் ஆக்குகிறது. அதோடு அவளது பாலியல், உளவியல் மற்றும் உணர்ச்சிகளின் சுயநிர்ணயமும் இல்லாமல் போகிறது. மூளை முதல் கருப்பை வரை அனைத்தின் வளர்ச்சியையும் பாதிக்கும் ஒரு கொடுமை இது. மற்றவர்களோடு இணைந்து ஒரு காரையோ, ரயிலையோ, விமானத்தையோ செய்வதும், பல நூற்றாண்டுகளாக வீட்டை சுத்தம் செய்து கொண்டிருப்பதும் ஒன்றல்லவே.
ஆக வீட்டில் அடிமையாக இருக்கும் நிலை உடைந்தால் தான் பெண்ணுக்கு தனது ஆற்றல்களுக்கு திறனுடைய உற்பத்தியில் பங்கு பெற கதவுகள் திறக்கும். வீட்டு வேலை சமூக நிறுவனமாக மாற்றப் படும்போது தான் பெண்கள் சமூக உற்பத்தியில் மீண்டும் நுழைய முடியும் என்று எங்கெல்ஸ் கூறியுள்ளார்.
நேரத்தை சேமிக்கும் பல தொழில்நுட்பம் இருக்கும் வளர்ந்த நாடுகளிலும் வீட்டு வேலை என்பது முதுகை உடைக்கும் நிலையில் தான் இருக்கிறது. வளரும் நாடுகளில் இது இன்னமும் மோசமாக இருப்பதும் நாம் அறிந்ததே.
தொழில்துறையில் வேலைக்கு சென்ற பெண்கள் இரட்டை அடிமைகளாக இருந்த போதிலும், வெளியுலக தொடர்பு தான் பெண்களுக்கு ஒடுக்குமுறைக்கு எதிராக போராட வேண்டும் என்ற உந்துதலை தந்தது.
"சமூக உற்பத்தியில் இருந்து பெண்கள் விடுபட்ட வரை சமூக அறிவிலும், சமூக கல்வியிலும் இருந்து விடுபட்டு இருந்தனர். பெண்கள் தொழில் துறை மற்றும் பொதுப் போராட்டங்களில், அதன் ஏற்பாடுகளில் இருந்து விடுபட்ட வரையில், அவர்களுக்கு சமூக கிளர்ச்சியை அனுபவிப்பது என்பதே இல்லாமல் இருந்தது. நமது திறன் என்ன, நமது வர்க்கத்தின் திறன் என்ன என்பதையும் பெண்கள் அறியாமல் இருக்கச் செய்கிறது. பெண்கள் மீது திணிக்கப்பட்ட இந்த தனிமையே அவர்களின் இயலாமை என்ற பொய்யாகிப் போனது. " என்று டெல்லா கோஸ்டா கூறுகிறார்.
ஆண் தொழிலாளிகளை சமாளிக்க முடியாத முதலாளித்துவம் மிக அவசியம் என்றால் ஒழிய பெண்களை பாட்டாளி வர்க்கத்தில் சேர்க்க விடாது.
பெண், சமூக உற்பத்தியில் மீண்டும் நுழைந்தால் தான் தனக்கென ஒரு அடையாளமும், தன் குடும்பத்தோடு மட்டுமல்லாது, தன்னை சமூகத்தின் ஒரு அங்கமாகவும் பார்க்க முடியும்.
நம்மைப் போன்ற ஒரு நிலப்பிரபுத்துவ சமூகத்தில் தாய் என்ற புனித பின்பம் கட்டப்படுகிறது. நாலு சுவர்களைத் தாண்டி எந்த அடையாளமும் இல்லாமல் ஆக்கும் ஒரு உத்தி தான் இந்த தாய் பிம்பம்.
பெருமளவில் உழைக்கும் வர்க பெண்கள், முழுமையான சுதந்திரம் என்ற அளவில் இல்லை என்றாலும், வீட்டில் இருக்கும் உயர் வர்க பெண்களை விட மரியாதையாக பார்க்கப் படுவது, அவர்களின் ஊதியத்தால், அவர்களின் பொருளாதார சுதந்திரத்ததால் தான்.
நமது அவசிய கடமையாக பெண்களை தந்தை, கணவன், மகன் என்ற அவர்களின் உடனடி ஒடுக்குமுறையை தாண்டி பார்க்க வைக்க வேண்டும், அதன் ஆணிவேரை கண்டு அதை ஒழிக்க போராட ஏது செய்யவேண்டும்.
எங்கெல்ஸ் திருமணம், மற்றும் குடும்பத்தின் எதிர்காலத்தை கணிக்க மறுத்தார். ஆனால் சோஷியலித்தால் மட்டுமே குடும்பம், மற்றும் திருமணம் ஆகியவற்றை ஒரு ஒடுக்குமுறை கருவியாக இருந்து ஒற்றுமைக்கான கருவியாக மாற்ற தேவையான பொருளாதாய நிலைமைகளை உருவாக்க முடியும் என்பதை நாம் உறுதியாக சொல்ல முடியும்.
"தனிப்பட்ட உறவுகளை நாம் சட்டம் இயற்றி ஆழிக்கத் தேவையில்லை, அதே நேரத்தில் நாம் குடும்பம் இல்லாத ஒரு சமூகத்தை கண்டும் அச்சம் கொள்ள தேவையில்லை." - என்று காஃப் சொல்கிறார்.
பெண்களை மொத்தமாக சமூக உற்பத்தியில் சேர்ப்பது, அதனால் குடும்பம், திருமணம் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள், எல்லாம் சோஷியலிசத்தில் மட்டுமே சாத்தியம். ஏனெனில் முதலாளித்துவத்தை போல பெண்களை ஆண்களுக்கு மாற்றாக செமப் பட்டாளமாக வைத்துக் கொள்ளும் உள்நோக்கம் சோஷியலிசத்திற்கு இல்லை
ஒடுக்குமுறைக்கான பொருளாயத நிலைமைகளை இல்லாமல், உற்பத்தி சமூக மயமாக்கப்பட்ட இடங்களில் மட்டும் தான் பெண் விடுதலையை பேசுவது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. இதற்கான மறுக்க முடியாத தரவுகள் வரலாற்றில் உள்ளன.
சோஷியலிச பொருளாதாரத்தில் மட்டுமே எல்லோருக்கும் வேலைவாய்ப்பு கொடுக்க முடிகிறது. சோஷியலிச நாடுகளில் மட்டுமே திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, சொத்துரிமை, வேலைவாய்ப்பு, கல்வி போன்றவற்றில் பெண்களுக்கு முன்னுரிமையும், பாதுகாப்பும், அதற்கான சட்டங்களும் நிறைவேற்றப்பட்டன, நிறைவேற்றப்படுகின்றன.
தனியார் லாபத்தை நோக்கமாக கொண்ட முதலாளித்துவ உற்பத்தி முறை, மகப்பேறு, குழந்தை வளர்ப்பு போன்றவற்றால் பெண்களை வேலைக்கு வைப்பதை வீணாகக் கருதுகிறார்கள். மிக அவசியமான தட்டுபாடு இருக்கும் போது மட்டுமே பெண்கள் வேலைக்கு வைக்கப் படுகின்றனர். ஒட்டுமொத்த சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றும் சோஷியலிச உற்பத்தி முறையில் இந்த அவசியம் இல்லை. சமூக அளவில், அரசின் செலவில் குழந்தைகள் காப்பகம், முதியோர் காப்பகம், ஆகியவை சோஷியலிச நாடுகளில் மட்டுமே சாத்தியமாகி உள்ளது.
இவையெல்லாம் செய்ய முடிந்த முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் 73 சதவிகித மருத்துவர்கள் பெண்கள், 33 சதவிகித பொறியாளர்கள் பெண்கள், மூன்றில் ஒருவர் பெண் நீதிபதி. பெருவாகணங்கள் ஓட்டுநர், ரயில் ஓட்டுநர், சுரங்கத் தொழிலாளி, என எதையும் விட்டு வைக்க வில்லை சோவியத் பெண்கள்.
முன்னாள் கிழக்கு ஜெர்மனி, கியூபா, வடகொரியா, அல்பேனியா, யுகோஸ்லாவியா, ஹங்கேரி போன்ற பல நாடுகளில் இன்றும் பெண்கள் பெருவாரியாக முன்னேறி இருப்பது கடந்த கால சோஷியலிச கொள்கைகளால் மட்டுமே.
ஒரு சோஷியலிச கட்டமைப்பு மட்டுமே எல்லாவற்றையும் மாற்றி விடும் என்று நினைப்பதும் தவறு.
பழைய பழக்க வழக்கங்கள் மற்றும் எண்ணக்களை மாற்ற மேல் கட்டுமானம் என்று நாம் கருதும், நம்பிக்கைகள், உணர்வுகள், சித்தாந்தம், போன்றவற்றில் நீடித்த போராட்டம் தேவைப்படுகிறது.
சோஷியலிச நாடுகளில் நடந்த, நடக்கும், இந்த பெண் விடுதலைக்கான இயக்கம் இன்னும் பல தூரம் செல்ல வேண்டியுள்ளது. எந்த நாட்டிலும் சமத்துவம் சாத்தியமாகி விட்டது என்று நம்மால் கூற முடியாது என்றாலும், எங்கும் பரவியிருக்கும் ஆண் ஆதிக்கம் தீவிரமாக மட்டுப்படுத்தப்பட்டது சோஷியலிச நாடுகளில் மட்டும் தான். அது உடையக் கூடிய சாத்தியமும் சோஷியலிச கட்டுமானத்தில் தான் இருக்கிறது.
அப்படி இருக்கையில் சோஷியலிசம் இல்லாத சமூகங்களில் பெண் விடுதலைக்கான இயக்கம் என்பது சோஷியலிசதிற்க்கான புரட்சிகர போராட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருப்பதே வேண்டும். சமூகத்தின் ஏனைய ஒடுக்கப்பட்ட பிரிவினரின் போராட்டங்களில் இருந்து தனித்து நிற்கும் பெண்விடுதலை இயக்கங்கள் அர்த்தமற்றது.
முக்கியமாக பெண்களை நசுக்கும் மதவெறி, பாரம்பரியம், சாதி மற்றும் பிற பகுத்தறிவற்ற விடயங்கள் புரட்சிகர எழுச்சிகளை எதிர்கொள்ளும் போது இடம் தெரியாமல் போய் இருக்கின்றன. வியட்நாம் பெண்களின் வீரம் செறிந்த போராட்டங்களில் நாம் இதை பார்த்திருக்கிறோம்.
அறிவியலில் உலகம் கண்ட மிகப்பெரும் முன்னேற்றங்கள் சுரண்டும் சிலரின் லாபத்திற்கு கட்டுப்படாமல் எல்லோருடைய விடுதலைக்கும் உதவுவதை சோஷியலிச புரட்சி மட்டுமே உறுதி செய்யும். இறுதியாக பார்த்தல் பெண்ணின் விடுதலை ஆணின் விடுதலையோடு பின்னிப் பிணைந்து உள்ளது.
Comments
Post a Comment